13 வது ஐபிஎல் சீசன் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 5 ரன்னிலும், பிரித்வி ஷா 19 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலம், ரிஷப் பண்ட் 5 ரன்னிலும் வெளியேறினர்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் 39 ரன்களும், ஹெட்மையர் 24 பந்தில் 45 ரன்களும் அடிக்க டெல்லி 150 ரன்களை கடந்தது. இறுதியில் களமிறங்கிய அக்சார் பட்டேல் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் டெல்லி அணி ஆடிய 6 போட்டிகளில் 5 ல் வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில மும்பை அணியும். முன்றாவது இடத்தில ஹைதராபாத் அணியும் உள்ளன. கடைசி இடத்தில பஞ்சாப் அணி உள்ளது.