இராணுவத்தின் மகத்தான சேவையை மதிக்கிறேன்! ஜனாதிபதி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கை இராணுவம் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பை பாராட்டுவதாகவும் நாட்டின் இடர் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இராணுவம் வழங்கி வரும் பங்களிப்புக்கு மதிப்பளிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 71வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

71 ஆண்டுகளில் நாட்டின் ஐக்கியம், இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இலங்கை இராணுவம் நேரடியான மற்றும் வெற்றிகரமான பங்களிப்பை வழங்கியுள்ளளது.

அத்துடன் நிற்காமல் தாய் நாட்டிற்கு ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்கள், இடர்களில் இருந்து பாதுகாக்கும் காவல் அரணாக செயற்பட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதில், இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்பை நான் மதிப்பாக கருதுகிறேன்.

நாட்டின் பாதுகாப்பு , இடர்முகாமைத்துவ உட்பட அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இராணுவம் வழங்கும் பலம் தொடர்பாகவும் எனது நன்றிகைளை தெரிவித்துக்கொள்வதுடன் இன்று கொண்டாடப்படும் 71வது ஆண்டு நிறைவு தினத்திற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.