இலங்கை அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு தொடர்பான கலந்துரையாடலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொண்டனர்.
இன்று புதன்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, 20ஆவது திருத்தத்தில் உள்ள சர்ச்சைக்குரிய இரட்டைப் பிரஜாவுரிமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டாம் என அரச தரப்பிலிருந்து தனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் முறையிட்டார்.
அழுத்தம் கொடுக்கும் அரசதரப்பு உறுப்பினர் யார் என்று மகிந்த ராஜபக்ச விமல் வீரவன்சவிடம் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விமல் வீரவன்ச, தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவே என்று பகிரங்கப்படுத்தினார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த மகிந்த ராஜபக்ச, கூட்டத்தின் இடைநடுவே எழுந்து சென்றார். பிரதமரின் வெளி நடப்பையடுத்து கோபத்திற்கு உள்ளான ஜயந்த கெட்டகொட, கட்சித் தலைவர் என்றும் பாராமல் அமைச்சர் விமல் வீரவன்ச மீது தாக்குதல் நடத்த முயற்சித்தார்.
இதனால் அந்த இடத்திலிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர, மொஹமட் முஸம்மில், நிமல் ஜயதிஸ்ஸ, காமினி வலேபொட, உத்திக்க பிரேமரத்ன ஆகியோர் தாக்குதல் நடத்த முயற்சித்த ஜயந்த கொட்டகொடவை ஆசனத்தில் அமரச் செய்தனர்.
ஆனாலும் கடும் கோபமடைந்த அமைச்சர் விமல் வீரவன்ச, எச்சரிக்கை விடுத்ததுடன் கட்சியின் கட்டுப் கோப்பை மீறி செயற்பட்டால் கட்சியில் இருந்து வெளியேற்றுவேன் எனவும் கூறினார்.
நேற்று இடம் பெற்ற கட்சிக் கூட்டத்தில் மூத்த உறுப்பினர் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச கூட்டத்தின் இடைநடுவே எழுந்து சென்றிருந்தார்.
20ஆவது திருத்த வரைபில் இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட முடியும் என்ற சரத்துக்குக் அமைச்சர்களான விமல் வீரவன், உதய கம்பன்வில ஆகியோர் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கெகிலிய ரம்புக்வெல உதய கம்பன்பில ஆகியோர் முரண்பட்டு இருந்தனர்.