மஞ்சளுடன் அரிசிமா கலந்து விற்பனை..!!

மஞ்சளுடன் அரிசிமாவை கலந்து விற்பனை செய்து வந்த ஆலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் பாவனைக்கு உதவாத 82 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மஞ்சளுடன் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசியும் அதனை மாவாக்கப் பயன்படுத்தப்பட்ட அரைக்கும் இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆலை தவுலகல , பூவெலிக்கட – கெலிஓயா வீதியில் அமைந்துள்ள நிலையில் ஆலையின் உரிமையாளர் மற்றும் புஸ்ஸல்லாவை , வத்துகஹபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த ஒருதொகை மஞ்சள் தம்புள்ளை, கல்முனை, கேகாலை, மாவனெல்ல மற்றும் காத்தான்குடி பகுதிகளிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாவனைக்கு உதவாத மஞ்சளை விற்பனை செய்த விற்பனை நிலையங்கள் தொடர்பில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் நுகர்வோர் அதிகார சபையின் கண்டி மாவட்ட பிரதானி ஏ. எம். பே. சமந்த அத்தபத்து உள்ளிட்ட குழுவினர் ஆலையிலிருந்த பாவனைக்கு உதவாத மஞ்சள் மற்றும் அதனுடன் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த ஆலை அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் குறித்த ஆலையை மூடி சீல் வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.