கொரோனா தொடர்பான அரசாங்கம் உண்மையான தரவுகளை வெளிப்படுத்தவேண்டும். தரவுகளை மறைப்பதால் பாரிய அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமூக பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதை ஏற்றுக்கொண்டு அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொரோனா சுகாதார நெருக்கடி தொடர்பாப இன்று சபை ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
கொரோனா தொற்று கொத்தணியாக நாட்டில் பல பிரதேசங்களில் இருந்து பரவி வருகின்றது. இவ்வாறான கொத்தணிகள் சமூக மட்டத்துக்கு பரவும் அபாயம் இருப்பதாக அரசாங்க வைத்தியர் சங்கம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் அதனை மறைத்து வருகின்றது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய சில ஆலோசனைகளை கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தெரிவித்து வந்தோம். ஆனால் அரசாங்கம் அதனை நகைச்சுவைக்கு எடுத்துக்கொண்டு அரசியல் ரீதியில் விமர்சித்து வந்தனர்.
அத்துடன் நாங்கள் அன்று தெரிவித்த விடயங்களை விமர்சித்த அரசாங்கம் தற்போது அதனை உணர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களின் காலதாமதத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதை விட அரசியல் நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.
மேலும் நாட்டில் இரண்டாவது அலையாக மீண்டும் தலைதூக்கி இருக்கும் கொரோனா தொற்று கொத்தணியாக வியாபித்து பல கொத்தனிகள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் கொத்தணிகளின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் அதிகரித்து செல்கின்றனர். இவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்து பெறுபேற்றை பெற்றுக்கொள்ள காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்கும் நிலையே இருக்கின்றது.
அதேபோன்று பி.சி.ஆர். மாதிரிகள் பரிசோதனைக்காக குவிந்திருப்பதாக தெரியவருகின்றது. அதேநிலையில் பி.சி.ஆர். பரிசோதனை இன்று வியாபாரமாக மாறிவருகின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.