வானில் இருந்து தரையிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.
பஞ்சாபில் உள்ள படைத்தளத்தில் இருந்து, இந்திய விமானப் படைத்தளத்துக்குச் சொந்தமான எஸ்.யூ-30 எம்.கே.ஐ.விமானம் குறித்த ஏவுகணையை தாங்கிச் சென்றது.
3 மணி நேரத்துக்கும் மேலாக அந்த விமானம் பயணித்து தொலைதூரம் சென்ற பின், ஏவுகணை செலுத்தப்பட்டது.
இதையடுத்து வங்கக் கடலில் இருந்த இலக்கை பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது.
இந்த ஏவுகணை நிலத்திலோ, கடலிலோ தொலைதூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது.
குறித்த ஏவுகணையை பகல், இரவு என இருவேளைகளிலும் இலக்கை நோக்கி செலுத்த முடியும். மோசமான வானிலையிலும் இலக்கைத் தாக்கி அழிக்கும்.
இந்திய விமானப் படையின் போர் திறனை அதிகரிக்கும் நோக்கில் 40இற்கும் மேற்பட்ட சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணைகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.