பாலின் உப பொருட்களான தயிரை பலரும் சுவைத்து சாப்பிட்டு இருப்போம். வெயில் காலங்களில் மோர் அல்லது தயிர் போன்ற சாதங்களை அதிகளவு சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில், தயிரினால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.
கையளவு தயிரினை எடுத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நல்ல உறக்கம் கிடைக்கும். தயிரில் இருக்கும் புரோட்டின், பாலில் உள்ள புரோட்டினை விட விரைவில் ஜீரணம் ஆகிவிடும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
பால் குடித்த ஒருமணிநேரத்திற்கு பின்னர் 32 விழுக்காடு பால் மட்டுமே ஜீரணம் ஆகியிருக்கும். தயிர் சாப்பிட்ட ஒருமணி நேரத்தில், 91 விழுக்காடு தயிர் ஜீரணம் ஆகியிருக்கும். பாலை தயிராக மாற்றும் பாக்டீரியவானது, குடலில் உருவாகக்கூடிய தேவையற்ற நோய்கிருமியின் வளர்ச்சியை தடுக்கும்.
தயிரில் உள்ள லாக்டொபஸில் ஜீரண சக்தியை அதிகரித்து, வயிறு சம்பந்தமான உபாதையை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத சமயங்களில் பெரும்பாலும் தயிரை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. அதிகளவு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருந்தால் வெந்தயம் + ஒரு கப் தயிர் சாப்பிடலாம்.
பிரியாணி போன்ற உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிட்டால், அது ஜீரணம் ஆகவும், உடலின் வெப்பத்தை தணிக்கவும் தயிர் + வெங்காயம் சாப்பிடுகிறோம். மாதவிடாய் சுழற்சி முடியும் 40 வயது மேல் உள்ள பெண்களுக்கு தயிர் பெரும் உதவி செய்கிறது. உடலுக்கு தேவையான கால்சியத்தை வழங்குகிறது.
புளித்த தயிரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி மிருதுவாக மாறும். தயிர் புளிக்காமல் இருக்க, சிறிய அளவிலான தேங்காய் துண்டை தயிருடன் சேர்த்தால் தயிர் புளிக்காது. வெண்டைக்காயை வதக்கும் போது, ஒரு கரண்டி தயிரையும் சேர்த்துக்கொண்டால், வெண்டைக்காயின் நிறம் மாறாமல் பிசுபிசுப்புத்தன்மை மட்டும் வெளியேற்றப்படும்.
வர்ணம் பூசும் தொழிலாளிகள் மற்றும் மண்ணெண்ணெய் உபயோகம் செய்து பணியாற்றும் தொழிலாளர்கள், தயிரை கொண்டு கை கழுவினால் மண்ணெண்ணெய் வாசம் போகும். தயிருடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து லஸ்ஸியாகவும் குடிக்கலாம். லஸ்ஸி உடலின் சூட்டை தணிக்கும்.