கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் ரம்மி மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பணத்தை இழந்த பலரும் கடனில் சிக்கி உயிரை விட்ட காரணத்தால் தமிழக அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ஆன்லைனில் வட்டிக்கு கடன் அளிக்கும் செயலிகளில், பணத்தை இழந்த பலரும் பகிரங்கமாக மிரட்டப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
iRupee, Cash bull, Money More போன்ற பல ஆன்லைன் வட்டி கடன் செயலிகளில் கடன் பெற்றவர்கள் பகிரங்கமாக மிரட்டப்பட்டு வருகின்றனர். இந்த செயலியில் நமது ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி விவரங்களை சேகரித்து வைத்து கடனுக்கு விண்ணப்பித்தால், கடனாக ரூபாய் ஐந்தாயிரம் கேட்கும் பட்சத்தில் கழிவுகள் போக ரூபாய் 3500 வரை நமது வங்கிக் கணக்கில் செலுத்துவார்கள்.
இந்த பணத்தை ஒரு வாரத்திற்குள் வட்டியோடு சேர்த்து செலுத்தாத பட்சத்தில், ஒரு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்து தொந்தரவு செய்துள்ளனர். இதனை அலட்சியப்படுத்தினால் நமது அலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்களையும் ஹேக்கிங் செய்து, நமது உற்றார் உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
இவ்வாறாக பல மிரட்டல்களை விடுத்து, பணத்தை கொள்ளையடித்து வரும் நிலையில், இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் பேசுவதற்கெனவே பணியாட்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், நாட்கள் செல்லச் செல்ல இந்த மிரட்டல்கள் வேறுவிதமாக இருக்கும் என்று சைபர் கிரைம் நிபுணர்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுகின்றனர்.
இந்த செயலியில் கடன் பெற்ற பெண்ணிற்கு தொடர்பு கொண்ட காமுக கொடூரன் ஒருவன், உனது தங்கைக்கு வீடியோ கால் செய்து பேசட்டுமா? என்பது குறித்த ஆடியோவும் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் கடன் செயலிகளை முடக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.