விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஒருவர் தனது கவனக்குறைவால் வயிற்றுக்குள் துணியை வைத்து தைத்து சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகாலை சேர்ந்தவர் நிறைமாத கர்ப்பிணியான ஷாகின் உத்னால் (வயது 28) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக விஜயாப்புரா நகரத்தில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றேடுத்துள்ளார்.
ஒரு வாரம் சிகிச்சைக்கு பின்னர் தாயும், சேயும் நலமாக இருப்பதாக கூறி ஷாகினையும், அவரது குழந்தையையும் டிஸ்சார்ஜ் செய்து இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக ஷாகின் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்றும் அவருக்கு வயிற்று வலி சரியாகவில்லை.
இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வயிற்றில் கட்டி எதுவும் உள்ளதா என்பதை கண்டறிய ஷாகின் ஸ்கேன் எடுத்த போது ஷாகினின் வயிற்றுக்குள் துணி வைத்து தைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டதுள்ளது.
பிரசவத்தின் போது வெளியேறிய ரத்தத்தை துடைக்க பயன்படுத்திய துணியை வயிற்றில் வைத்து தைத்து விட்டதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஷாகின் பிரசவம் பார்த்த மருத்துவரிடம் சென்று முறையிட்டபோது கவனக்குறைவால் இது நடந்து விட்டதாகவும், ஷாகினிடம், அந்த மருத்துவர் வருத்தம் தெரிவித்து அறுவை சிகிச்சை மூலம் துணியை அகற்றுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனாலும் கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷாகினின் உறவினர்கள், மருத்துவ அதிகாரிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தற்போது அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் ஷாகினியின் வயிற்றில் வைத்து தைத்த துணியை அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.