நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர, ஏதாவது ஒரு தீர்வு கிடைத்து விடாதா என்ற தேடல் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
வீட்டிலாக இருந்தாலும் சரி, தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு நல்லது நடந்து விட்டால் போதும். மேலும், கண் திருஷ்டி மற்றும் கெட்ட சக்தியை விரட்ட என்னென்னலாம் செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.
விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது.
வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம்.
இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.