ரிஷப ராசி அன்பர்களே! வரும் புத்தாண்டில் சந்தோஷம் பொங்கும்- எந்த தெய்வத்தை வழிபடணும் தெரியுமா?

01.01.2021 முதல் 30. 06. 2021 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். பழையகால சண்டை சச்சரவுகள், பூசல்கள் முடிவுக்கு வரும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். செய்தொழிலில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். முடங்கிப் போன காரியங்கள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும்.

குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப காரியங்களும் நடைபெறும். திட்டமிட்ட வேலைகளில் உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர்கள். குழந்தைகளை சரியான பாதையில் வழி நடத்துவீர்கள். சமூகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். போட்டி பொறாமைகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.

பிறரின் ஏளனப் பேச்சுக்குத் தக்க பதிலடி கொடுப்பீர்கள். அதேசமயம் எவரிடமும் உரிமை எடுத்துக்கொண்டு அனாவசிய பேச்சுகள் பேச வேண்டாம். எவருக்கும் கடன் கொடுப்பதோ, உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடாது. எந்த ஆவணத்திலும் கையெழுத்திடும் முன்பாக அதை முழுமையாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

01.07. 2021 முதல் 31. 12. 2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்துவீர்கள். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அனைத்து செயல்களையும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பீர்கள். பொருளாதார வளம் உயர்வதற்கான வழிகளைப் பின்பற்றுவீர்கள். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டில் இருந்து மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். புதிய வருமானத்தால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். உங்கள் செயல்களில் விறுவிறுப்பு கூடும்.

நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். உடல் சோர்வைப் பொருட்படுத்தாது கடினமாக உழைப்பீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள். ஆன்மிகத்திலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றிக் கொள்ளும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். சக ஊழியர்களை உங்களின் அமைதியான அன்பான அணுகுமுறையால் கவர்வீர்கள். சிலருக்கு குறுகிய காலப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.

வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெற சற்று காலதாமதம் ஏற்படும். அகலக்கால் வைக்காதீர்கள். சிலருக்கு வழக்கு வியாஜ்ஜியங்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை பன்மடங்கு பெருக்குவீர்கள். கால்நடை தீவனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். குறுகியகாலப் பயிர்களால் விளைச்சல் பெருகி லாபம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு இரண்டும் அதிகரிக்கும். கட்சியில் அந்தஸ்தான பொறுப்புகளைப் பெறுவீர்கள். மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். சிலருக்கு புது வீட்டுக்கு மாறும் வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர்களின் சொத்தில் பெரிய பங்கு உங்கள் கைக்கு வந்து சேரும்.

மாணவர்கள் இந்த புத்தாண்டில் கடினமாக உழைத்து கணிசமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயத்தைத் தவிர்க்க யோகா, பிராணாயாமம், உடற்பயிற்சிகளைச் செய்யவும். புத்தாண்டில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.