தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையிலும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற படங்கள் வெளியாவதால் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் பட வெளியீட்டுற்கு திரையரங்க உரிமையாளர்கள், ரசிகர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் அரவிந்த்சாமி “சில நேரங்களில் 50% சதவீதம் என்பது 100% என்பதை விட சிறந்ததாகவே இருக்கும். அவற்றில் இதுவும் ஒன்று” என கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது அரவிந்த சுவாமி சினிமா டிக்கெட்களின் விலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில் ‘எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஏன் சினிமா டிக்கெட்களின் விலையை கட்டுபடுத்த வேண்டும். வெவ்வேறு செலவில் வெவ்வேறு தரத்தில் உருவாக்கப்படும் பொருட்களுக்கு எப்படி ஒரே விலையை நிர்ணயிக்க முடியும். அதுவும் திரையரங்குகள் இருக்கும் இடத்தின் மதிப்பு வெவ்வேறாக இருக்கும் நிலையில்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.