புதுக்குடியிருப்பு கிராம சேவகர்களை போன் போட்டு மிரட்டிய பெண்! வெளியான முக்கிய தகவல்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் கடமையாற்றும் இரு கிராம அலுவலர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் சகோதரியால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகர் பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலர் ஒருவரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறும், பிறிதொரு கிராம அலுவலரை இடமாற்றுமாறும் கோரி புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முக்கிய பிரமுகர் ஒருவர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் பிரதேச செயலாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும், இருந்தபோதும் அவர்களின் இடமாற்றம் தொடர்பில் பரிசீலிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை எனக் கருதி இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் எதுவித நடவடிக்கையும் எடுக்காது இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து 15.01.2021 அன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் பிரதேச செயலாளரின் மேற்படி செயற்பாட்டுக்கு அதிருப்தி தெரிவிக்கும் முகமாக கண்டனத் தீர்மானம் ஒன்றை கொண்டுவர மேற்படி உறுப்பினரும் முப்புர வட்டாரத்தின் உறுப்பினரும் முயற்சி ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் அறியமுடிகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் கிராம அலுவலர்களின் கடமைகளிலும், அவர்களின் இடமாற்றங்கள் தொடர்பிலும் தேவையற்ற அரசியல் தலையீடுகளை ஏற்படுத்த புதுக்குடியிருப்பு பிரதேசசபையை சேர்ந்த சில பிரதேச சபை உறுப்பினர்கள் முயன்று வருவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம அலுவலர்கள் விசனம் தெரிந்து வந்த நிலையிலையே நேற்று (21) புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முக்கிய பிரமுகரின் சகோதரி தொலைபேசி ஊடாகவும், மெசேஞ்சர் வழியாகவும் இரு கிராம அலுவலர்களை தொடர்புகொண்டு மரியாதையற்ற விதமாக தகாத வார்த்தைகளால் சரமாரியாக ஏசியதுடன், கடும் தொனியில் மிரட்டியுமுள்ளதாக கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.