ஒரே வருடத்தில் 1700 கோடி ரூபாய் சம்பாதித்த இந்திய வீரர்.!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் விளம்பரம் மூலமாக சுமார் 1,700 கோடி ரூபாய் சம்பாதித்து முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒரு நாள், டி20 அணி என மூன்று அணிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.

விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இந்திய சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்களை விட விராட்கோலி மிகுந்த பிரபலமாக இருந்து வருகிறார்.

பல நிறுவனங்கள் இவரை போட்டி போட்டுக் கொண்டு தங்களது நிறுவனங்களுக்காக விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து வருகின்றன. தற்போது அவர் கைவசம் 30க்கும் மேற்பட்ட விளம்பர நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான இந்திய பிரபலங்களில் மிகவும் மதிப்பு மிக்க நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, விளம்பர வருமானம் மூலம் விராட் கோலி 1737 கோடி ரூபாய் சம்பாதித்து முதலிடத்தை பிடித்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர் தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 860 கோடி ரூபாய் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2 இடங்கள் பின்தங்கி 762 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.