தமிழக வீரரான அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய வீரர்களில் அவர் படைக்கும் புதிய சாதனையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்டிலும் மிரட்டலாக விளையாடியுள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2 டெஸ்டிலும் சேர்த்து அஸ்வின் 17 விக்கெட் வீழ்த்தினார்.
முதல் போட்டியில் 9 விக்கெட்டும், 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டும் கைப்பற்றினார். அதோடு 2-வது போட்டியில் சதம் அடித்தும் முத்திரை பதித்தார்.
அஸ்வின் இதுவரை 76 டெஸ்டில் 394 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்சில் 59 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சாக கருதப்படுகிறது.
ஒரு டெஸ்டில் 140 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 29 முறை 5 விக்கெட்டுக்கு மேலும், 7 தடவை 10 விக்கெட்டுக்கு அதிகமாகவும் எடுத்துள்ளார்.
400 விக்கெட் என்ற சாதனையை பதிவு செய்ய இன்னும் அவருக்கு 6 விக்கெட் தேவை. இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் பகல்-இரவாக நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இதை சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், 400 விக்கெட்டை கைப்பற்றும் 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். உலக அளவில் 16-வது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் கும்ப்ளே (619 விக்கெட்), கபில்தேவ் (434), ஹர்பஜன் சிங் (417) ஆகியோருக்கு அடுத்தபடியாக அஸ்வின் உள்ளார்.
கும்ப்ளே 85 டெஸ்டிலும், ஹர்பஜன்சிங் 96 டெஸ்டிலும், கபில்தேவ் 111 டெஸ்டிலும் 400 விக்கெட்டை தொட்டு இருந்தனர்.
ஆனால் அஸ்வின் 77-வது டெஸ்டில் 400 விக்கெட்டை எடுக்க அதிகமான வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் அவர் இந்திய வீரர்களில் புதிய சாதனை படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.