தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த வடிவேலு தற்போது பட வாய்ப்புகள் இன்றி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம், ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் இருந்து வடிவேலு பாதியில் விலகியதும், அதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கருக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதும் தான்.
இதனால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுக்கு ரெட் கார்ட் போட்டதால், அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருவதில்லை. அதேபோல், அவரை நடிக்க வைப்பதில் இயக்குநர்களும் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால், வீட்டில் முடங்கியிருக்கும் வடிவேலு, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசுகையில், தனது பரிதாப நிலை குறித்து பகிர்ந்துக் கொண்டதோடு, மேடையில் கண் கலங்கவும் செய்தார்.
இந்த நிலையில், வடிவேலுவை வைத்து படம் இயக்க பிரபல சீரியல் இயக்குநர் திருமுருகன் தயராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் இயக்கிய ‘எம்-மகன்’ மற்றும் ‘முணியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு’ திரைப்படங்களில் வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருமுருகன் இயக்கும் புதிய திரைப்படத்தில் வடிவேலு மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடிக்க இருப்பதாகவும், ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.