டுனேடின்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் 2வது போட்டியிலும் நியூசிலாந்து 4ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி அங்கு 5ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வென்ற நியூசி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் டுனேடினில் நேற்று நடந்த 2வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களம் கண்ட நியூசி 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 219ரன் குவித்தது. அந்த அணியின் மார்ட்டின் குப்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடியாக விளையாடி 97(50பந்து, 6பவுண்டரி, 8சிக்சர்), கேப்டன் கேன் வில்லியம்சன் 53(35பந்து, 2பவுண்டரி, 3சிக்சர்), ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழக்காமல் 45*(16பந்து, 1பவுண்டரி, 6சிக்சர்) ரன் விளாசினர். ஆஸி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 3, டேனியல் சாம்ஸ், ைஜ ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
அடுத்து 220ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸியும் அதிரடியாக விளையாடியது. ஆனால் அந்த அணி 20ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 215ரன் மட்டுமே எடுத்தது. அதனால் நியூசி 4ரன் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றது. ஆஸியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 78(37பந்து, 7பவுண்டரி, 5சிக்சர்), ேஜாஷ் பிலிப் 45(32பந்து, 2பவுண்டரி, 3சிக்சர்), டேனியல் சாம்ஸ் 41(15பந்து, 2பவுண்டரி, 4சிக்சர்) ரன் குவித்தனர்.
நியூசி தரப்பில் மிட்செல் சான்ட்னர் 4, ஜேம்ஸ் நீஷம் 2, டிம் சவுத்தி, ஈஷ் சோதி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி மார்ச் 3ம் தேதி வெலிங்டன்னில் நடக்கிறது.
7வது விக்கெட் சாதனை
டி20 போட்டியில் 7வது விக்கெட்டுக்கு அதிக ரன் குவித்த ஜோடி என்ற புதிய சாதனையை ஆஸி வீரர்கள் ஸ்டோய்னிஸ், சாம்ஸ் ஆகியோர் படைத்துள்ளனர். இந்த ஜோடி நேற்று 7வது விக்கெட்டுக்கு 37பந்துகளில் 92ரன் விளாசினர். இதற்கு முன் இங்கிலாந்து வீரர்கள் காலிங்வுட், யார்டி ஆகியோர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 7வது விக்கெட்டுக்கு 91ரன் குவித்ததே சாதனையாக இருந்தது.