இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு பதிலளிக்க வேண்டும் என்றால் முதலில் நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த 12 வருடங்களாக மக்களுடைய உரிமைகளை மறுதலிக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள் எனவும் இ.சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மறுபக்கத்தில் பல வருடங்களாக கீரியும் பாம்புமாக இருந்த முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் தற்போது ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் எதிர்வரும் காலத்தில், தேவேந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை வரையான போராட்டத்தை நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இ.சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்