* 2-1 தொடரில் முன்னிலை
* 2வது நாளே முடிந்த டெஸ்ட் அஷ்வின் 400 விக்கெட்
அகமதாபாத், பிப்.26: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 2வது நாளே இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் போட்டி பகல்/இரவு போட்டியாக அகமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் களம் இறங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 48.4ஓவருக்கு எல்லா விக்கெட்களையும் இழந்து 112ரன்னுக்கு சுருண்டது. கிராவ்லி அதிகபட்சமாக 53ரன் எடுத்தார். இந்திய தரப்பில் அக்சர் 6, அஷ்வின் 3, இஷாந்த் 1 விக்கெட் எடுத்தனர்.
இந்திய முதல் இன்னிங்ஸ்: தொடர்ந்து களம் கண்ட இந்தியா முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 33ஓவருக்கு 3 விக்கெட்களை இழந்து 99 ரன் எடுத்தது. இங்கிலாந்தை விட 14ரன் பின்தங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 57*, அஜிங்கிய ரகானே1*ரன்னுடன் நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். இந்தியா அதிக ரன் குவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் லீச், பகுதிநேர பந்து வீச்சாளர் ரூட் என இரட்டைச் சூழலில் இந்தியா சின்னாபின்னமாகியது. அதனால் ரகானே 7, பொறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் 66, ரிஷப் 1, வாஷிங்டன் 0, அக்சர் படேல் 0, அஷ்வின் 17, பும்ரா 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்தியா 53.2ஓவரில் 145ரன் எடுத்தது. இஷாந்த் சர்மா 10* ரன்னுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ரூட் 5, லீச் 4, ஆர்ச்சர் 1 விக்கெட் எடுத்தனர். இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: அடுத்து வெறும் 33ரன் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய சுழல் அதிவேகமாக விக்கெட்களை சுழற்றி வீச ஆரம்பித்தது. அதனால் அஷ்வின், அக்சர் இருவரும் மட்டுமே பந்து வீசி கிராவ்லி 0, சிப்லி 7, பேர்ஸ்டோ 0, ரூட் 19, ஸ்டோக்ஸ் 25, ஒல்லி போப் 12, போக்ஸ் 8, ஆர்ச்சர் 0, லீச் 9ரன் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேறினர்.
சுழலுக்கு சாதகமாக இருந்தும் முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு ஓவர் கூட தரவில்லை, இங்கிலாந்து தரப்பில் ஓரே ஒரு விக்கெட் எஞ்சியிருக்கும் போது வாஷிங்டன்னுக்கு 2வது இன்னிங்சில் 31வது ஓவர் கிடைத்தது. அந்த ஓவரின் 4வது பந்தில் ஆண்டர்சனை டக் அவுட்டாக்கினார். அதனால் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 30.4ஓவருக்கு எல்லா விக்கெட்களையம் இழந்து 81ரன் எடுத்தது. இது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து எடுத்த குறைந்தபட்ச ரன்னாகும். ஸ்டூவர்ட் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் அக்சர் 5, அஷ்வின் 4, வாஷிங்டன் ஒரு விக்கெட் வீழ்த்தினர். கூடவே இங்கிலாந்து 48ரன் முன்னிலை பெற்றது.
இந்தியா 2வது இன்னிங்ஸ்: அதனையடுத்து 48ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 25*(25பந்து, 3பவுண்டரி, 1சிக்சர்), ஷூப்மன் 15*(21பந்து, 1பவுண்டரி, 1சிக்சர்)ரன் மட்டும் பொறுப்புடன் விளையாடி 7.4ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49ரன் என்ற இலக்கை எட்டினர். அதனால் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் சிக்சர்
100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இஷாந்த் சர்மா தனது முதல் சிக்சரை விளாசினார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 57ரன் உட்பட இதுவரை 746ரன் சேர்த்துள்ளார். அதில் 84பவுண்டரிகளும் உள்ளன.
அஷ்வின் அள்ளினார் 401
இரண்டாவது இன்னிங்சில் ஜோப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டை கைப்பற்றியதின் மூலம் 400விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஷ்வினும் இணைந்தார். இந்திய அளவில் 400 விக்கெட்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் கும்ப்ளே, கபில்தேவ், ஹர்பஜன் ஆகியோருக்கு அடுத்து 4வது இடத்தில் அஷ்வின் உள்ளார்.
டெஸ்ட் போட்டியில் அஷ்வின் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கையும் 302 ஆக உயர்ந்துள்ளது. குறைந்த டெஸ்ட்(77டெஸ்ட்) போட்டிகளில் 400 விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் அஷ்வின் 2வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை வீரர் முரளிதரன் 72 டெஸ்ட்களில் இந்த இலக்கை எட்டினார். இந்திய வீரர் கும்ப்ளே 85டெஸ்ட்களில் இந்த சாதனையை படைத்தார்.
அக்சர் அள்ளிய 11
பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அக்சர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 70ரன்களை விட்டுதந்து 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் உள்ள ஆஸி வீரர் பேட் கம்மின்ஸ 62ரன்களை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து 10 விக்கெட்களையும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் தேவேந்திர பிஷு 174ரன்களை பாகிஸ்தானுக்கு அள்ளிதந்து 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சிக்கனம் ஜோ ரூட்
திடீரென பந்து வீசிய ஜோ ரூட் குறைந்த ரன்(8) மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய சிக்கன பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை ரூட் படைத்துள்ளார். கூடவே கேப்டன் பாப் வில்லிக்கு பிறகு 5விக்கெட்(1983) எடுத்த முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனையையும் செய்துள்ளார். மேலும் முதல் 3ஓவரில் ஒரு ரன் கூட தராமல் 3விக்கெட்களை அள்ளினார்.
இது 22வது 2வது நாள் வெற்றி
டெஸ்ட் போட்டிகளில் அரிதாக 2வது நாளிலேயே வெற்றியை சுவைத்த சம்பவங்கள் நேற்றுடன் 22 முறை நடந்துள்ளன. இதற்கு முன் இங்கிலாந்து 9முறையும், ஆஸ்திரேலியா 8முறையும், தென் ஆப்ரிக்கா 2முறையும், இந்தியா, நியூசிலாந்து தலா ஒரு முறையும் 2வது நாளே வெற்றியை சுவைத்திருந்தன. இப்போது இந்தியா 2வது முறையாக 2வது நாளே வெற்றியை வசப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2018ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை 2வது நாளே இந்தியா வீழ்த்தியுள்ளது.