தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து திட்டமிட்டு 23 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நிறுவனமொன்றின் முகாமையாளராக பணிபுரியும் குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் அந்நிறுவனத்திற்கு உரித்தான 23 இலட்சம் ரூபா பணம் மற்றும் 84 ஆயிரம் பெறுமதியான காசோலை என்பவற்றை வேறு நபர்கள் ஊடாக திட்டமிட்டு கொள்ளையிட்டதுடன் , அது தொடர்பில் அவரே பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடளித்துள்ளார்.
குறித்த நபரால் நேற்றையதினம் அவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமை முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய சந்தேக நபரே திட்டமிட்டு நிறுவன பணத்தை கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மீகாவத்தை பொலிஸ் நிலையத்தில் நேற்று ஈயந்துட்டுவ பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றின் 23 இலட்சம் பணம் மற்றும் 84 000 ரூபா பெறுமதியுடைய காசோலை என்பவற்றை வங்கியில் வைப்புச் செய்வதற்காக கொண்டு சென்ற போது வங்கிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டுச் சென்றதாக அந்நிறுவனத்தின் முகாமையாளரால் முறைப்பாடளிக்கப்பட்டது.
இது தொடர்பில் மீகாவத்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த சம்பவம் முறைப்பாடளித்த முகாமையாளரினால் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்த பையில் 50 000 ரூபா பணம் மாத்திரமே காணப்பட்டுள்ளது. குறித்த நபர் வெவ்வேறு தேவைகளுக்காக அவர் தொழில்புரிந்த நிறுவனத்தின் பணத்தை செலவிட்டமையினால் அவற்றை மீள செலுத்துவதற்காக இவ்வாறானதொரு கொள்ளையை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான குறித்த முகாமையாளர் அவரது மனைவியின் சகோதரனுக்கு பணத்தை வழங்கி , தான் வங்கிக்கு கொண்டு செல்லவிருந்த 23 இலட்சம் ரூபாவை கொள்ளையடிப்பதற்கு இருவரை ஒழுங்குபடுத்துமாறு கூறிய திட்டத்திற்கமையவே பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் தொழில் புரியும் நிறுவனத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொண்ட பணத்தை மீள செலுத்துவதற்காக இவ்வாறு திட்டமிட்டு போலியாக முறைப்பாடளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முறைப்பாடளித்த சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு போலியாக முறைப்பாடளிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும், குறித்த முகாமையாளருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.