ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஐ.நா பொதுச் சபையின் 76 வது அமர்வில் கூடுதல் நிதியை கோருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானத்தில் இலங்கையின் நிலைமை குறித்து, அறிக்கை அளிக்க மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம், ஐ.நா 76 ஆவது பொதுச் சபையில் வரவு செலவுத் திட்ட ஆதரவை கோரியுள்ளது.
எனினும் தற்போது இலங்கைக்கு தேவைப்படும் நிதி தொடர்பில் 2021 மற்றும் 2022 க்கான வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நாவால் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் எழுந்த சமீபத்திய நிதி தேவைகள் பொது கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.
அதன்படி பொது இயக்க செலவுகளுக்காக 137,400 அமெரிக்க டொலர்களும், ஒப்பந்த சேவைகளுக்கு 130,000 அமெரிக்க டொலர்களும், ஊழியர்களின் பயணத்திற்கு 41,200 அமெரிக்க டொலர்களும் கோரப்படுகிறது. அவை தவிர, பங்கேற்பாளர்கள் மற்றும் சாட்சிகளைச் சந்திக்க 75, 400 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட வேண்டும்.
இதேவேளை விசாரணை மற்றும் சான்றுகள் சேகரிக்கும் பொறிமுறைக்கு இலங்கையில் 12 புலனாய்வாளர்களை நியமிக்க மனித உரிமைகள் பேரவை தீர்மானித்துள்ளது.
நிரல் வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதலைக் கோருவதில், உண்மை கண்டுபிடிப்புகள், தகவல் சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு அதிகரிப்பதற்காக ஊழியர்களுக்காக நான்கு பயணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையால் மேற்கொள்ள முன்மொழியப்பட்ட விஷயங்களில் செயற்கைக்கோள் படங்களை சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் மற்றும் ஒரு தகவல் ஆதார களஞ்சியத்தை நிறுவுதல் ஆகியவையும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.