நிலாவரையில் மீண்டும் தோண்டும் தொல்பொருள் திணைக்களம்?

யாழ்ப்பாணம் புத்தூர் நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் மீளவும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

நிலாவரை கிணற்றிற்கு அருகில் உள்ள தொல்பொருள் திணைக்களத்திற்குரிய பகுதியென அடையாளமிடப்பட்ட பகுதியில் இன்று துப்பரவு பணியில் ஈடுபடவுள்ளதாக நேற்று, வலி கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு, தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ,அதை எழுத்துமூலம் வழங்கும்படி தி.நிரோஷ் கேட்டிருந்த போதும் , எழுத்துமூலம் தகவல் வழங்காமல் இன்று தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கு பணியை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் நிலத்தை அகழும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் வலி கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஷ் சென்று அங்குள்ள நிலைமையை அவதானித்து வரும் நிலையில் அவரை மிரட்டும் பாணியில் புலனாய்வாளர்கள் படம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் மா.கலையமுதன் உள்ளிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினரும் நிலாவரையடிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது