யாழ் மாவட்டத்தில் இன்று முதல் அமுலாகும் கட்டுப்பாடுகள்

யாழ் மாநகர பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி யாழ் நகரின் ஒரு பகுதி தனியாரின் செயற்பாட்டிற்கு மாத்திரம் முடக்கப்பட்டுள்ளது. எனினும், அங்குள்ள வங்கிகள், அரச அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கலாம் என்ற முடிவை மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு செயலணி நேற்று எடுத்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாத்தின்படி, இன்று முதல் யாழ் மாவட்டத்தில் அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்,

யாழ்ப்பாணம் மாநகரின், பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி வரையான காங்கேசன்துறை வீதியின் இரு மருங்கு கடைகளும், வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான இரு மருங்கு கடைகளும், முனீஸ்வரன் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், கஸ்தூரியார் வீதி, பழைய தபாலக வீதிகளிலுள்ள இரு மருங்கு கடைகளும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும்.

முடக்கப்பட்ட பகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்களும், பணியாளர்களும் வீடுகளில் குடும்பத்துடன் சுயதனிமைப்பட்டு, அந்த பகுதி சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரே,குறித்த பகுதிகள் விடுவிக்கப்படும் போது வர்த்தக நிலையங்களை மீண்டும் திறக்கலாம்.

பாடசாலைகள் யாவும் வழக்கமாக இயங்கும் எனினும் , யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 இற்கு மேற்பட்ட மாணவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நீலையில் குறித்த மாணவர்கள் கல்வி பயின்ற வகுப்புக்களை மட்டும் மூட முடிவு செய்ய்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் உயர்தரம், சாதாரண தரம், புலமைப்பரிசில் வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களிற்கான அனைத்து தனியார் கல்வி வகுப்புக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பூப்புனித நீராட்டு விழா, திருமணவிழா, குடும்ப விழாக்களை மண்டபங்களில் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விழாக்களை வீடுகளில் 50இற்கு மேற்படாத குடும்ப அங்கத்தவர்களுடன் நடத்தலாம்.

மரணவீடுகளில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ளலாம் என்பதுடன் 24 மணித்தியாலங்களில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை புதுவருட தினத்தை முன்னிட்டு நடைபெறும் நடைபாதை வியாபாரம் யாழ் மாவட்டத்தில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

தேவையற்ற ஒன்றுகூடல்கள், களியாட்டங்கள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது எனினும்

அவசியமான கூட்டங்கள் மாத்திரம் சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் நடத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது..