ம்ட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தரால் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கொள்வனவு பொலிஸ் பிரிவில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தரான ஆர்.பி.டி.துமிந்த(90518) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே மேற்படி பணப்பையைக் கண்டெடுத்தார்
குறித்த உத்தியோகத்தர் அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்கு வந்து கொண்டிருந்தபோதே மாவடி முன்மாரி பகுதியில் வீதியில் கிடந்த பணப்பையைக் கண்டெடுத்துள்ளார்.
அந்த பணப்பையில் 11300.00 ரூபாய் பணம்,சாரதி அனுமதிப் பத்திரம்,ஏரீஎம் அட்டை,வாகன காப்புறுதி,தேசிய அடையாள அட்டை உட்பட பல ஆவணங்கள் இருந்தன.
இந்த நிலையில் குறித்த பணப்பைக்குச் சொந்தக்காரரான முனைக்காட்டைச் சேர்ந்த குணரட்ணம் கனிஸ்டன் உயர் வகுப்பு மாணவனிடம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க பணப்பையை ஒப்படைத்தார்.
இதேவேளை பணப்பையைக் கண்டெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த வாரமே மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மையான செயலுக்கு பலரும் பாராட்டு கூறிவருகின்றனர்