இந்தியாவில் கடந்த பல மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல், தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய் பரவலின் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு, தற்போது நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கண்டறியப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்த்தல், கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
சமீப காலமாக நாட்டின் முக்கிய புள்ளிகளுக்கும், திரை பிரபலங்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு நாள்களாக லேசான காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஹர்மன்ப்ரீத்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.