யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதியைச் சேர்ந்த 13 பேருக்கு கொவிட்.. வெளியான தகவல்

யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு இன்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 541 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கட்டன.

அவற்றில் 13 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதில் இருந்து இதுவரை 117 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆயிரத்து 440 பேரிடம் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவர்களில் இதுவரை 35 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.