ரவுடி பேபி புகழ் தீ மற்றும் அறிவு இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
உலகளவில் ரசிகர்களை கவர்ந்து டாப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் நீடிக்கிறது என்ஜாய் எஞ்சாமி எனும் பாடல்.
சுயதீன கலைஞர்களை ஊக்குவிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள ‘மாஜா’ தளத்தின் தயாரிப்பில் இப்பாடல் உருவானது.
கடந்த 7ம் தேதி யூடியூப்பில் வெளியிடப்பட்டு மூன்று வாரங்களில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலை, பாடகர் தீ மற்றும் அறிவு இணைந்து பாடியிருக்கின்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரபலமாகி வரும் இப்பாடலை, குழந்தைகள் கூட ரசித்து கேட்கின்றனர்.
முக்கியமாக பிரபலங்கள் இப்பாடலுக்கு நடனமாடும் வீடியோ காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
அழிந்து வரும், காடுகள், தாவரங்கள், கிளிகள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் நிறைந்த வெப்பமண்டல காடுகளை உயிர்ப்பிக்கும் வகையிலும், நம் மூதாதையர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இப்பாடலின் வரிகள் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த கால இளசுகளுக்கு ஏற்றவாறு ராப் கலந்த காம்போவாக இருப்பதால் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்பதில் பலருக்கும் சந்தேகமில்லை.
இந்நிலையில் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி பேசியுள்ள சந்தோஷ் நாராயணன், ஆதரவு மற்றும் அங்கீகாரம் பெறப்பட வேண்டிய குரல்களையும், கலைஞர்களையும் அடையாளம் காண்பதற்கான முயற்சியை நாங்கள் தொடர்வோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.