நேற்று 141 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் – இருவர் மரணம்

நாட்டில் நேற்றைய தினம் 141 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 115 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணியுடன் 7 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.

அத்தோடு நாட்டில் மேலும் இரண்டு கொவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தோரின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிபடுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பன்சியகம பகுதியை சேர்ந்த 79 வயதான பெண்ணொருவர் கடந்த 2ஆம் திகதி தமது வீட்டில் வைத்து மரணித்தார்.

இருதய நோய் நிலைமை மற்றும் கொவிட்-19 நோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரொன்தொட்ட பகுதியை சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி மரணித்தார்.

கேகாலை பேதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணித்தார்.

கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட மோசமடைந்த இருதய நோய் நிலைமை மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.