இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளான 132 கர்ப்பிணிகளின் நிலை என்ன?

இலங்கையில் இதுவரையில் 132 கர்ப்பிணிகள் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இவர்களில் எவரும் உயிரிழக்கவில்லை. அத்துடன் ஒரு வயதுக்கு குறைந்த இரு குழந்தைகள் இதுவரையில் கொவிட் -19 தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகத்தின் தாய்மார் மற்றும் குழந்தைகள் சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான எந்தவொரு கர்ப்பிணி தாயும் உயிரிழக்கவில்லை. சகலருக்கும் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு அவர்கள் பூரண குணமடைந்துள்ளனர்.

பிரசவத்தின் ஆரம்ப கட்டத்திலும் குழந்தை பிறக்கும் போதும் பிறந்த பின்னரும் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளான தாய்மார் காணப்பட்டனர். சுமார் 130 கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

தாய்மார் மற்றும் குழந்தைகள் சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா

அத்துடன் ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகள் இரண்டு கொவிட் -19 தொற்றால் உயிரிழந்திருந்தன. இந்த குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாது வீட்டிலேயே நோய் நிலைமை தீவிரமடைந்தமையால் உயிரிழந்தன.

இதுவரையில் இலங்கையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படவில்லை. கொவிட் தடுப்பூசி வழங்குவதால் கர்ப்பிணி பெண்கள் கொவிட் -19 தொற்றுக்கு இலக்காக மாட்டார்கள் என்று உறுதிப்படுத்தபடாமையால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை. இதே காரணத்திற்காகவே 18 வயதை விடக் குறைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை என்றார்.