தேரர்களை வேட்டையாடும் அரசாங்கம்!

உயிரிழந்த இராணுவத்தினரின் ஓய்வூதியத்தை அவர்களின் மனைவிகளுக்கு வழங்குமாறு கோரி கொழும்பு கோட்டையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது செய்யப்பட்டமையானது பொலிஸார் திட்டமிட்டு செய்த சூழ்ச்சி எனவும் தற்போதைய அரசாங்கம் பிக்குமார் வேட்டையை ஆரம்பித்துள்ளதாகவும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் ஒருவரை பயன்படுத்தி பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தி விட்டு, எமது சந்திரரதன தேரரை கைது செய்தனர்.

அப்படியானால், இது முற்றிலும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி. அரசாங்கம் பிக்குமாரை கைது செய்து இவ்வாறு வன்முறையை மேற்கொண்டால், எமக்கு அதற்கு எதிராக செயற்பட நேரிடும் எனவும் தயாரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு முக்கிய பங்காற்றிய பிக்குவான சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர், கொழும்பு கோட்டை பொலிஸார், சந்திரரதன தேரரை கைது செய்து தடுத்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.