உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
1987ல் வெளியான மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் முதன்முறையாக திரைப்பயணத்தை தொடங்கிய அவர் 2020ஆம் வெளியான தாராள பிரபு திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.
தனது நகைச்சுவையால் கருத்துக்களை கூறுவதால் ஜனங்களின் கலைஞன் என அழைக்கப்பட்ட விவேக், சமூக நலன் சீர்த்திருத்த கருத்ததுகளையும் பரப்பியதால் சின்ன கலைவாணர் என இவர் செல்லமாக அழைக்கப்பட்டார்.
மேலும் நடிகர் விவேக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக பணிகளிலும் அதிக ஆர்வமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.