30 வயது மனைவி, 20 வயது கணவனை கொன்று புதைத்த பயங்கரம்.!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குத்துக்கல்வலசை பகுதியை சார்ந்தவர் அபிராமி. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். அபிராமியின் முதல் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் வருடத்தில் அச்சன்புதூர் பகுதியை சார்ந்த 20 வயது இளைஞர் காளிராஜை திருமணம் செய்துள்ளார். கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் முதல் காளிராஜ் மாயமாகிவிட்ட நிலையில், காளிராஜின் தாய் உமா மகனை தேடி வந்துள்ளார்.

இது தொடர்பாக காளிராஜின் தாய் உமா அபிராமியிடம் 2 வருடமாக விசாரித்தும் பலனில்லாத நிலையில், இந்த விஷயம் குறித்து தனது மருமகள் மீது சந்தேகம் இருப்பதாக தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அபிராமியிடம் விசாரணை செய்துள்ளனர். முதலில் முன்னுக்கு பின் முரணான பதில் வரவே, தீவிர விசாரணையில் ஆண் நண்பருடன் சேர்ந்து முதல் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணையில், அபிராமி தனது இரண்டாவது கணவருக்கும் – தனக்கும் 10 வருடம் வயது இடைவெளி இருந்தாலும், பெயரளவிற்கு இரண்டாவது திருமணம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், பலரிடம் தனக்கு இருந்த நட்பை காரணம் காண்பித்து தன்னை தொந்தரவு செய்து வந்த காளிராஜை கொலை செய்ய முடிவு செய்தேன்.

இதன்போது, குத்துக்கல்வலசை பகுதியை சார்ந்த மெக்கானிக் மாரிமுத்துவுடன் பழக்கம் ஏற்படவே, இதனை அறிந்துகொண்ட காளிராஜ் எனது பழக்கம் குறித்து ஊர் மக்களிடம் கூறுவதாக தெரிவித்தான். இதனால் ஆத்திரமடைந்த நான், காளிராஜை தீர்த்துக்கட்ட மாரிமுத்துவிடம் தெரிவித்தேன்.

நாங்கள் இருவரும் சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் காளிராஜை கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்துவிட்டோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மாரிமுத்துவை கைது செய்த காவல் துறையினர், தோட்டத்தில் புதைக்கப்பட்டு இருந்த காளிராஜின் எலும்பு கூடுகளை மீட்டு ஆய்வுக்காக அங்குள்ள பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.