கலவிக்காக ஒருவருக்குப் பணம் கொடுத்தால் அது விபச்சாரம்தானே என்கிறீர்களா? அதை சிகிச்சையாகவும் பயன்படுத்த முடியும் என்கிறார் இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு நிபுணர்.
ஒருவரை பாலியல் துணைவராகப் பயன்படுத்தி நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் முறை பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. இது சர்ச்சைக்குரியது. பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இஸ்ரேலிய அரசாங்கம் காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக இந்த முறையை அனுமதிக்கிறது. அதுவும் அரசுப் பணத்திலேயே.
டெல் அவிவ் நகரில் பாலியல் சிகிச்சையளிக்கும் ரோனித் அலோனியின் அறை நீங்கள் எதிர்பார்த்தது போலவேதான் இருக்கும். வாடிக்கையளர்கள் அமர சொகுசான சோபா, விளக்கமளிப்பதற்கு ஆண், பெண் உறுப்புகளின் வரைபடங்கள் ஆகியவை உண்டு.
ஆனால் பக்கத்து அறையைப் பார்த்தால் வியப்படைவீர்கள். மெழுகுவத்தி வெளிச்சத்தில் படுக்கை இருக்கும். இங்குதான் வாடகைத் துணைவர்கள், அலோனியின் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் பாடம் எடுப்பார்கள். உறவில் நெருக்கமாக இருப்பது எப்படி என்பதைக் கூறுவார்கள். இணைசேரக் கற்றுத் தருவார்கள்.
“இது தங்கும் விடுதிகளைப் போல் இல்லை. ஒரு வீட்டைப் போலவும் அடுக்குமாடிக் குடியிருப்பைப் போலவும் அமைக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் அலோனி. அங்கு மெத்தை, பாட்டுக் கேட்கும் கருவி, குளிப்பதற்கான இடம் ஆகியவற்றுடன் சுவர்களில் பாலுணர்வைத் தூண்டும் ஓவியங்களையும் பார்க்கலாம்.
“இணைசேரத் துணை இல்லாவிட்டால் பாலியல் சிகிச்சை முழுமையடையாது. துணை இல்லாதவர்களுக்கு அவர்களின் வெற்றிடத்தை வாடகைத் துணைவர் மூலமாக நிரப்புகிறோம்,” என்கிறார் அலோனி
இந்தமுறையை விமர்சிப்பவர்கள் இதை விபச்சாரத்துடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் இஸ்ரேல் அரசு இந்த முறையை முழுமையாக அனுமதிக்கிறது. வீரர் காயமடைந்து, பாலுறவு கொள்ளும் திறன் பாதிக்கப்பட்டால், அரசே அவருக்கு வாடகைத் துணை மூலம் சிகிச்சையளிப்பதற்கான மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்கிறது.
பிறருக்கு இன்பத்தை அளிக்க முடியும் அல்லது பிறரிடமிருந்து இன்பம் பெற முடியும் என்று அனைவரும் உணர வேண்டியிருக்கிறது என்கிறார் அலோனி. பாலியல் மறுவாழ்வுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர்.
“சிகிச்சை பெறவே இங்கு வருகிறார்கள். இன்பமடைவதற்காக வருவதில்லை. அதனால் இது விபச்சாரம் இல்லை” என்கிறார் உறுதியாக.
“இங்கு 85 சதவிகிதம் நெருக்கம், தொடுதல், அளித்தல், பெறுதல், தொடர்புகொள்ளுதல் ஆகியவைதான். இணைசேருவதுடன் சிகிச்சை நிறைவுபெற்றுவிடுகிறது”
ஒரு இஸ்ரேலின் ராணுவ வீரர் 30 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த விபத்தில் பாலுறவுத் திறனை இழந்துவிட்டார். அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
தம்மை “ஏ” என்று அழைக்கும்படி கேட்டுக் கொண்ட அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தன.
“காயமடைந்த பிறகு, எதையெல்லாம் சுயமாகச் செய்தாக வேண்டும் என்ற பட்டியலைத் தயார் செய்தேன். உண்பது, குளிப்பது, கார் ஓட்டுவது, கலவி கொள்வது ஆகியவை அந்த பட்டியலில் இருந்தன” என்றார் ஏ.
அவரது மனைவிக்கு மருத்துவர்களிடம் பாலியல் சிக்கல் பற்றிப் பேசுவதற்குத் தயக்கமாக இருந்தது. அதனால் அலோனியிடம் செல்வதற்கு வலியுறுத்தினார்.
அலோனி எப்படிச் சிகிச்சையளித்தார். ஒவ்வொரு அமர்வுக்கு முன்னும் பின்னும் என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பற்றி ஏ விளக்கினார்.
“இங்கு தொடு, அங்கு தொடு என்று படிப்படியாகச் சென்று பாலியல் உச்சம் அடையும் வரை சிகிச்சை நடந்தது” என்றார் ஏ.
பாலியல் சிகிச்சைக்காக தனக்கு அரசு செலவு செய்வது சரிதான் என்று வாதிடுகிறார் ஏ. வாரம்தோறும் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். மூன்று மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது.
“வாடகைத் துணைவரைத் தேடிச் செல்ல நான் விரும்பியதில்லை. காயமடைந்த பிறகு வாழ்க்கையின் அனைத்தையும் மீட்டெடுக்கவே விரும்பினேன்” என்று சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பேசுகிறார் ஏ.
“வாடகைத் துணைவருடன் நான் காதல் கொள்ளவில்லை. எனக்குத் திருமணமாகி விட்டது. நான் செய்தது இலக்கை அடைவதற்கான ஒரு நுட்பம் மட்டுமே”
“கலவி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். வாழ்வின் திருப்தி. அதற்காக நான் பெண்களைத் தேடி அலைபவன் அல்ல”
அலோனியின் சிகிச்சை மையத்துக்கு வெவ்வேறு வயதுடைய, பலவகைப் பின்னணியைக் கொண்டவர்கள் வருகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை. சிலர் கலவிக்கு அஞ்சுகிறார்கள். சிலர் பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள். சிலருக்கு நெருங்குவதற்குத் தயக்கம் இருக்கிறது. வேறு சிலர் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெரும்பாலும் உடல் குறைபாடுகளைக் கொண்டவர்களுக்கு அலோனி முக்கியத்துவம் கொடுக்கிறார் அலோனி. அவரது நெருங்கிய உறவினர்கள் பலருக்கு குறைபாடு உள்ளது. விமானியான அவரது தந்தை விமான விபத்து ஒன்றில் மூளை பாதிக்கப்பட்டவர்.
“என் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு உடல் குறைபாடுகளைக் கொண்டவர்களுடனேயே இருந்து வந்திருக்கிறேன். அவர்கள் அனைவரின் வாழ்க்கையையும் மீட்க முடிந்திருக்கிறது. அதனால் நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறேன் ” என்கிறார் அலோனி.
நியூயார்க்கில் படித்துக் கொண்டிருந்தபோது வாடகைத் துணைவர் ஒருவரின் அறிமுகம் அலோனிக்குக் கிடைத்தது. 1980-களில் இஸ்ரேலுக்குத் திரும்பி வந்த பிறகு வாடகைத் துணைவர்களைப் பயன்படுத்துவதற்கு மூத்த மதத் தலைவர்களிடம் அனுமதி பெற்றார்.
மதத் தலைவர்கள் ஒரையொரு கட்டுப்பாட்டை மட்டும் விதித்தார்கள். எந்தவொரு மணமான பெண்ணோ, ஆணோ வாடைகத் துணைவராகப் பயன்படுத்தப்படக்கூடாது. அதை அலோனி கடைபிடித்தார்.
சில காலத்துக்குப் பிறகு அரசே அவரது சிகிச்சைக்கு அனுமதி வழங்கியது. அவரது மையத்தில் சிகிச்சை பெற்ற சுமார் ஆயிரம் பேரில் பலர் காயமடைந்த ராணுவ வீரர்கள், அரசின் நிதி உதவியுடன் சிகிச்சை பெற்றவர்கள்.
“இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் இருந்தே எப்போதும் போர்ச்சூழல்தான் நீடித்து வருகிறது. இங்குள்ள ஒவ்வொருவருக்கும் காயமடைந்த, இறந்துபோன ஒருவரையாவது தெரியும். அதனால் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.”
தம்மை டேவிட் என்று அழைக்குமாறு கேட்டுக்கொண்ட அந்த மனிதருக்கு 40 வயதிருக்கும். 2006-ஆம் ஆண்டு நடந்த லெபனான் போர் அவரது வாழ்க்கையை முடக்கிவிட்டது. அவரது நடக்கவோ, நகரவோ முடியாது.
சிகிச்சை நிபுணர்களின் துணையுடனேயே அவரால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
“நான் சாதாரணமாகத்தான் இருந்தேன். தூரக் கிழக்குக்குச் சென்றுவிட்டு திரும்பியிருந்தேன். பல்கலைக்கழகத்தில் படித்தபடியே மதுபானக்கூடத்திலும் வேலை செய்துவந்தேன். நண்பர்களுடன் சுற்றுவதும், விளையாடுவதும் எனக்குப் பிடிக்கும்”
போரின்போது டேவிட்டின் படைப்பிரிவு மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அவரது காலிலும் தலையிலும் அடிபட்டது. மூன்றாண்டுகள் மருத்துவமனையில் கழிந்தன. வாழும் எண்ணமே தொலைந்துபோனது.
அவருக்குச் சிகிச்சையளித்தவர்கள், வாடகைத் துணவர்களைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சை பற்றிக் கூறியபோதுதான் புதிய ஒளி தெரிந்தது.
“வாடகைத் துணைவருடான சிகிச்சைக்கு முன்பு தோல்வியடைந்தவனைப் போல எனக்குத் தோன்றும். ஆனால் சிகிச்சையின்போது இளைஞனாகவும் வடிவானவனாகவும் உணரத் தொடங்கினேன்” என்றார் டேவிட்.
ஆனால் டேவிட்டுக்கு வேறு சிக்கல் ஏற்பட்டது. வாடகைத் துணைவர் மீது காதல். ஆனால் விதிகள் அதை ஏற்கவில்லை.
“வாழ்நாள் முழுவதும் எனது வாடகைத்துணைவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அது முடியாதென்றபோது மனம் பாரமானது. ஆயினும் இணையாக இல்லாமல் நண்பர்களாக இருக்க முடியும் என்பதால் ஆறுதலடைந்தேன்”
சிகிச்சைக்கு வெளியே தொடர்புகொள்ளக்கூடாது என்பது நோயாளிக்கும், வாடகைத் துணைவருக்கும் கூறப்பட்டிருக்கும் விதி. ஆனால் டேவிட்டுக்கு மட்டும் இந்த விதி தளர்த்தப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு டேவிட் முற்றிலுமாக மாறிவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி அவர் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்.
செராபினா ஒரு வாடகைத் துணைவர். ரோனித் அலோனியின் மையத்தில் பத்தாணடுகளுக்கும் மேலாக பணியாற்றுகிறார். மிகவும் அழகான, மெலிந்த தேகம் கொண்ட, எதையும் தெளிவாகப் பேசும் ஆற்றல் கொண்டவர்.
அண்மையில் தனது அனுபவங்களைக் கொண்ட புத்தகத்தை அவர் வெளியிட்டார். “நெருக்கம், ரகசியம், இன்பத்துக்கான வழியைப் பற்றிய சுயசரிதை” என்பது அதன் தலைப்பு.
மற்ற வாடகைத் துணைவர்களைப் போலவே செராபினாவுக்கும் வேறொரு பணியும் இருக்கிறது.
“உள்ளுக்குள் ரகசியங்களைச் சுமந்துகொண்டு, துயரத்துடன் இருக்கும் மக்களுக்கு நான் உதவ விரும்பினேன். ஏனெனில் அவர்களுக்கு உதவ முடியும் என்று எனக்குத் தெரியும்.” என்று விவரிக்கிறார் செராபினா.
“சிகிச்சையின் அங்கமாக கலவியோ, எனது உடலோ பயன்படுத்தப்படுவது பற்றி எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த யோசனை என்னைக் கவர்ந்தது.” என்று கூறுகிறார் செராபினா.
செராபிராவுக்கு தாம் ஒரு “பயண வழிகாட்டியை” போன்று செயல்படுவதாக எண்ணம். தனக்குத் தெரிந்த வழியில் தன்னுடைய வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதுதான் தனது வேலை என்கிறார்.
40 வாடிக்கையாளர்களுடன் பணியாற்றியிருக்கிறார் செராபினா. ஆனால் டேவிட்டின் காயங்கள் சவாலானவையாக இருந்தன. அவருக்கு எப்படி உதவுவது எப்படி என்பதைப் புரிந்துகொண்டு, அவருடன் தனிப்பட்ட முறையில் உரையாடி வருகிறார்.
“நான் அறிந்த வகையில் மிகவும் கடினமாக இருந்தது டேவிட்டின் சிகிச்சை. அவரால் நகரவே முடியாது. அதனால் நான் அதிகம் யோசித்துச் செயல்பட வேண்டியிருந்தது.”
செராபினாவுககு ஆண் நண்பர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர் செய்வதை ஏற்றுக் கொள்கிறார்கள். எல்லோரும் செராபினாவைப் போல் இல்லை. திருமணம் செய்து கொள்வதற்காகவோ, வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக வாடகைத் துணைவர் வேலையை விட்டுவிடுகிறார்கள்.
சிகிச்சை முடிந்து வாடிக்கையாளர்களை விடையனுப்புவது கடினமானது என்று கூறுகிறார் செராபினா.
“அது விடுமுறையைக் கழிப்பது போலத்தான். அது இனிமையான பிரிதல். சில நேரங்களில் அழுகை வரும். இருப்பினும் மகிழ்ச்சிதான்” என்கிறார்.
“சிகிச்சை பெற்றவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவோ, குழந்தை பெற்றதாகவோ கேள்விப்பட்டால் நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை”
மாலை நேரத்தில் ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள பாலியல் நிபுணர்களுக்கு ஆன்லைனில் உரையாற்றுகிறார் அலோனி.
வாடகைத் துணைவர் முறை வழக்கமான முறைகளைவிட அதிகப் பயனளிப்பதாக பல்வேறு தகவல்களுடன் விளக்குறார்.
மிகவும் தீவிரமான காயம்பட்ட வீரர்களுக்கு நவீன அறுவைச் சிகிச்சைகளுடன், வாடகைத் துணைவர் முறையும் சேர்ந்து சிறந்த பலன்களைத் தரும் என அலோனி நம்புகிறார்.
“ஆண் அல்லது பெண் என்ற சுயமரியாதையை மீட்காமல் ஒருவரது வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது ” என்கிறார்.
“இது முக்கியம். வாழ்க்கையின் இந்தப் பகுதியைத் தவிர்க்க முடியாது. மனிதனின் மையம் இது. வெறும் பேச்சால் எதுவும் நடக்காது. நமக்கும் பிறருக்கும் இடையில் தீவிரமாக இயங்கும் ஒரு அம்சம் இது”
“நவீன தலைமுறை கலவி பற்றி தவறான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. அதுகுறித்துக் கேலி செய்கிறார்கள். ஒன்று மிகவும் பழமைவாதமாக இருக்கிறார்கள். இல்லையென்றால் அதிதீவிரப் போக்கைப் பின்பற்றுகிறார்கள்”
“பாலியல் அம்சங்கள் பற்றி ஒருபோதும் சமநிலையான போக்கு இருந்ததில்லை. எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அது பின்பற்றப்படவில்லை. இணை சேருவதுதான் வாழ்க்கை. அதுதான் இயற்கை” என்று விவரித்து சொல்கிறார் அலோனி.