மன்னாரில் வீட்டில் இருந்த மதுபானத்தை மனைவி மற்றும் மகள் குடித்ததாக கூறியதால் கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமமொன்றிலேயே குறித்த சம்பவம் கடந்த 13-ம் திகதி இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது. அதாவது புதுவருட தினத்திற்கு அருந்த சில எண்ணிக்கையிலான மதுபான போத்தல்களை இரண்டு தினங்களுக்கு முன்பே கொள்வனவு செய்து வீட்டில் வைத்துள்ளார் நபர் ஒருவர்.
இந்நிலையில் கடந்த 13-ம் திகதி மாலை ஒரு மதுபான போத்தலை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல முயற்சித்துள்ளார் நபரொருவர், அப்போது சில மணித்தியாலயங்களில் வருடம் பிறக்க இருக்கின்றது, 14-ம் திகதி அதிகாலை ஆலயத்திற்கு செல்ல வேண்டும் அதனால் மது அருந்த வேண்டாமென மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்த நபரிடம் கோரிய போது அதையும் மீறி குறித்த நபர் தனது நண்பர்களுடன் மது அருந்த சென்று விட்டார்.
இதனையடுத்து வீட்டில் இருந்த மேலும் சில மதுபோத்தல்களை குறித்த நபரின் மனைவி வெளியில் போட்டு உடைத்துள்ளார், சில மணி நேரங்களின் பின்னர் மது போதையில் வந்த கணவர் வீட்டிலிருந்த ஏனைய மதுபான போத்தல்களை எடுத்து செல்ல வந்துள்ளார், அப்போது வீட்டுக்குள் எங்கு தேடியும் மது போத்தல் கிடைக்கவில்லை, இதனையடுத்து குறித்த நபர் தனது மனைவி மற்றும் மகளிடம் மதுப்போத்தல்கள் எங்கே என கேட்டு முரண்பட்டுள்ளார்.
அப்போது குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் தாங்கள் அந்த மதுப்போத்தல்களை எடுத்து அருந்திவிட்டதாக கூறி குடிகாரர்கள் போல் கதைத்துள்ளனர், இதனையடுத்து இரு தரப்பினர் கருத்து மோதலில் ஈடுபட்ட நிலையில், குறித்த நபர் சிறிது நேரத்திற்கு பின்னர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.