தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்த, விராட் கோஹ்லி அரை சதத்துடன் அவருக்கு ஒத்துழைக்க பெங்களுர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர்.
பட்லர் 8 ஓட்டங்களுடனும், மனன் வோரா 7 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அணித் தலைவர் சஞ்சு சாம்சன் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சிவம் துபே 46 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 25 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 40 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூர் சார்பில் சிராஜ், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, பெங்களூர் அணி 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் இறங்கினர். தொடக்கம் முதலே தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளாசினார்.
அவருக்கு கோஹ்லி பக்கபலமாக இருந்தார். இதனால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை.
படிக்கல் 51 பந்தில் சதமடித்து அசத்தினார். அவர் 101 ஓட்டங்களுடனும், கோஹ்லி 72 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எட்டினர்.
இறுதியில், பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.