பூகோள அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிவரும்! மங்கள எச்சரிக்கை

தற்போதைய வடிவத்திலேயே கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், பூகோள அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தற்போதைய வடிவத்திலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாக இருந்தால், கடன் நிதிநெருக்கடிகளையும் பூகோள அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியேற்படலாம்.

அதுமாத்திரமன்றி நிதி ரீதியான மோசடிகள் இடம்பெறுவதற்கான ஒரு மத்திய நிலையமான கொழும்பு மாற்றமடையும். அதற்குப் பதிலாக உண்மையிலேயே நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான முன்னேற்றமடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் முதலீடுகளை இழக்கவேண்டிய நிலையேற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.