2011ஆம் ஆண்டு சர்வதேச பண சுத்திகரிப்பு சமந்தமான விடயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற பட்டியலுக்கு சேர்க்கப்பட்டிருந்த இலங்கையை நல்லாட்சி அரசாங்கம் அந்த நிலைமையில் இருந்து மீட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக மீண்டும் நாடு அந்த கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எமது நாடு சர்வதேச கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் வெளிப்படைதன்மை இல்லாத நாடு என்ற பட்டியலில் 2011ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி அந்த பட்டியலில் இருந்து நாட்டை நீக்கினோம்.
மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி எமது நாட்டை கறுப்பு பட்டியலில் சேர்த்தனர்.
நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், 2018ஆம் ஆண்டு நாங்கள் முன்வைத்த யோசனையை ஏற்றுக்கொண்டு கறுப்பு பட்டியலில் இருந்து நாட்டை நீக்கினர்.
இலங்கையை மீண்டும் அந்த பட்டியலுக்குள் சேர்க்க இடமளிக்க முடியாது. இலங்கை மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழக்க முடியாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.