இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..!!

இந்தியாவில் கொரோனாவின் 2 ஆவது அலை அதிதீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர் (74.53 சதவீதம்), மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகம், கேரளா, சத்தீஷ்கார், மேற்கு வங்காளம், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 73 இலட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 28 இலட்சத்து 13 ஆயிரத்து 658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 812 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்தியா முழுவதும் இதுவரை 14 கோடியே 19 இலட்சத்து 11 ஆயிரத்து 223 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.