திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ (படம்) காலமானார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ (Francois Gros). 1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார்.
பாரிஸ் நகரில் (1933 – 2021) பாரிஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராக அவர் பணிபுரிந்தார்.
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய பிரான்சுவா குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.
சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ் வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன.
பிரான்சின் லியோன் நகரில் 17.12.1933இல் பிறந்த இவர், இலக்கியத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின் கிரேக்கம், இலத்தீன் மொழிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்.
இந்திய மொழிகள் பற்றி ஆய்வில் ஈடுபட்ட அவர், முதலில் சமஸ்கிருத இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த அவருக்குத் தமிழ் மொழி மீது பற்றுதல் ஏற்பட்டது.
தமிழ் இலக்கியங்களும் இவருக்கு அறிமுகம் ஆயின. பாரிசில் உள்ள இனால்கோ நிறுவனத்தில் இணைந்து தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.
பிரான்சுவா குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, நவீன தமிழிலக்கியத்திற்கும் பேரிழப்பாகும்.