ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய தயாரிப்புகள் இப்போது இந்தியாவிலும் விற்பனைச் செய்யப்படுகின்றன. இதில் ஊதா நிற ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மற்றும் ஸ்மார்ட் டிராக்கர் ஏர்டேக் ஆகியவை அடங்கும். ஆப்பிள் கடந்த வாரம் தனது ஸ்பிரிங் லோடட் நிகழ்வில் புதிய ஐபாட் புரோ, ஐமேக் மற்றும் ஆப்பிள் டிவி 4K உடன் இந்த தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியது.
புதிய ஆப்பிள் தயாரிப்புகளை இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து வாங்கலாம். அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் மூலமாகவும் இது கிடைக்கிறது. இரண்டு தயாரிப்புகளும் அமேசான் இந்தியாவிலும் கிடைக்கின்றன.
ஊதா நிற ஐபோன் 12, 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் அடிப்படை மாடலுக்கு ரூ.79,900 விலையில் கிடைக்கிறது. 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலைகள் முறையே ரூ.84,900 மற்றும் ரூ.94,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
64 ஜிபி ஸ்டோரேஜ் உடனே ஊதா நிற ஐபோன் 12 மினி அடிப்படை மாடலின் விலை ரூ.69,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பு விருப்பங்களுடன் முறையே ரூ.74,900 மற்றும் ரூ.84,900 விலையில் கிடைக்கிறது. புதிய வண்ணத்தைத் தவிர, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினியின் விலைகள் அல்லது விவரக்குறிப்புகளில் எந்த மாற்றமும் இல்லை.
ஆப்பிள் ஏர்டேக் டிராக்கிங் சாதனத்தைப் பொறுத்தவரை, இதன் விலை ரூ.3,190 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ரூ.10,900 விலையில் நான்கு ஏர்டேக் சாதனங்களை ஒன்றாகவும் பெறலாம். இதை ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோர், அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் மற்றும் அமேசான் இந்தியாவில் வாங்கலாம்.
ஆப்பிள் புதிய ஐபாட் புரோ, ஐமேக் மற்றும் ஆப்பிள் TV 4K ஆகியவற்றிற்கான முன்கூட்டிய ஆர்டர்களை இன்று அதன் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் மூலம் ஏற்க தொடங்கி உள்ளது. இந்த தயாரிப்புகள் எப்போது விற்பனைக்கு வரும் என்பதை ஆப்பிள் வெளிப்படுத்தவில்லை, ஆனால் அவை மே இரண்டாம் வாரத்தில் விநியோகத்தை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.