அமெரிக்கா தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வந்தது.
மேலும் அவ்வப்போது அணு ஆயுதங்களையும் சோதித்து வந்தது. இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் உருவானது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகான அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரு தரப்புக்கும் இடையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதனிடையே அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றதை தொடர்ந்து, வடகொரியாவுடனான பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வடகொரியாவுடனான பதற்றத்தை தணிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளில் அந்த நாட்டு அரசை தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் வட கொரியா அவற்றுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் ஜோ பைடன் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன், வடகொரியா மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உலக பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக கூறினார். மேலும் தூதரக ரீதியிலும் கடுமையான சட்டங்கள் மூலமாகவும் இந்த பிரச்சினைகளை தீர்க்க நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையில் வடகொரியாவுடனான பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முந்தைய நிர்வாகங்களின் தோல்வியடைந்த அணுகு முறையில் இருந்து முற்றிலுமாக விலகி, மாறுபட்ட அணுகு முறையை கையிலெடுக்க ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வடகொரியா, அமெரிக்கா தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி குவான் ஜாங் கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வடகொரியாவின் அணு சக்தி திட்டம் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் ஆற்றிய உரை முற்றிலும் சகிக்க முடியாதது மற்றும் மிகப்பெரிய தவறு ஆகும்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்கா செய்ததைப் போலவே வடகொரியா மீதான விரோத கொள்கையைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கான ஜோ பைடனின் நோக்கத்தை அவரது உரை தெளிவாக பிரதிபலிக்கிறது.
அமெரிக்க தலைமை நிர்வாகி இன்றைய பார்வையின் வெளிச்சத்தில் ஒரு மிகப்பெரிய தவறை செய்தார் என்பது உறுதி.
இதன் மூலம் வடகொரியா மீதான அமெரிக்காவின் புதிய கொள்கையின் முக்கிய நோக்கம் தெளிவாகிவிட்டதால் அதற்கான நடவடிக்கைகளுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்க நிர்பந்திக்கப்படுவோம். இதன் மூலம் எதிர்காலத்தில் அமெரிக்கா கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட மிகவும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.