ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பறிபோகும் உயிர்கள்! நிலைமையை சரி செய்ய இந்திய அரசு அதிரடி திட்டம்!

கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளிலேயே ஆக்சிஜன் வசதியுடன் 10,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் சூழல் குறித்து பல்வேறு துறையினருடன் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடா்ச்சியான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினாா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு இந்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உருக்காலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், மின்னுற்பத்தி ஆலைகள் ஆகியவற்றில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

ஆனால், அங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜன், மருத்துவத் துறைக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனினும் அந்த ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டுக்கானதாக மாற்ற இயலும்.

எனவே, அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, ஆக்சிஜன் உற்பத்தியாகும் இடங்களுக்கு அருகிலேயே ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் உடனடியாக தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, நகரங்கள், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள், ஆக்சிஜன் தேவைப்படும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள ஆலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சோதனை முயற்சியாக, 5 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் பொதுத் துறை அல்லது தனியாா் நிறுவனங்களின் மூலமாக இயக்கப்படும்.

மிக விரைவிலேயே 10,000 ஆக்சிஜன் வசதி படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளையும் செவிலியா் பயிற்சி மாணவ, மாணவிகளையும் கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தி, அவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.