கர்நாடகாவில் நடந்து சென்ற போது சாலையில் விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடலை JCBயில் தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகி கலங்க வைத்துள்ளது.
கர்நாடகாவின் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா குரதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா (வயது 42), இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இவரது கணவர் மரணமடைந்த நிலையில், பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார், இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சந்திரகலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
எனினும் அவரது உடல்நலம் தேறாமல் இருந்துள்ளது, இந்த நிலையில் நேற்று சந்திரகலா சிந்தாமணியில் இருந்து குரதஹள்ளி கிராமத்திற்கு வந்திருந்தார்.
அப்போது சாலையில் நடந்து சென்ற போது, திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார், இதைப்பார்த்த மக்கள் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சி பக்கத்திலேயே செல்லவில்லை, சிறிது நேரத்தில் சந்திரகலா இறந்தும் போனார்.
இதையடுத்து பெண்ணின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அங்கிருந்தவர்களிடம் வாகனம் கேட்டதற்கு, அப்போதும் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த அதிகாரிகள் JCB யில் அப்பெண்ணின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. இறந்த சந்திரகலாவின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.