கட்டுப்பாட்டை இழந்த மிகப்பெரிய சீனா ரொக்கெட்; பூமியில் எங்கு, எப்போது வேண்டுமானாலும் விழலாம்! வெளியான முக்கிய தகவல்

சீனாவால் விண்ணில் செலுத்திய லாங் மார்ச் 5B ரொக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா இடம் பெறவில்லை. எனவே, தங்களுக்கான தனி விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.

பூமிக்கு மேலே 370 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த புதிய விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை லாங் மார்ச் 5பி என்ற ரொக்கெட் மூலம் கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி சீனா விண்ணில் ஏவியது. இந்த தொகுதியின் எடை 21 டன் என கூறப்படுகிறது.

தற்போது, இந்த ரொக்கெட்டின் பாகம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றி வருகிறது. அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இந்த ரொக்கெட்டின் பாகங்கள் பூமியில் எங்கு வேண்டுமானாலும் விழக்கூடும் என SpaceNews ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

100 அடி உயரமும் 16 அடி அகலமும் கொண்ட இந்த ரொக்கெட்டின் பாகம் பூமிக்குள் நுழையும்போது, வளிமண்டல உராய்வு காரணமாக எரிந்து சிதைந்து விடும்.

எனினும் அதிகளவிலான சிதைவுகள் பூமியில் விழக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், எங்கு விழும், எப்போது விழும் என்பதை கணிக்கக் கூடிய சூழல் தற்போது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.