தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. திமுக மட்டும் 133 தொகுதிகளில் வென்று தனி பெரும்பான்மைப்பெற்றது.
இந்நிலையில், இன்று 133 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
மே 7ம் திகதி வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார், இந்நிகழ்வு எளிமையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு மோடி, பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள் என சீமான் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை என்றாலும், தமிழகத்தின் 3வது அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.