கொவிட் 19 தொற்றிற்கு எதிராகப் போராடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அரசாங்கம் வேறு எந்த செயற்றிட்டத்திற்கும் பயன்படுத்தாது என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கொவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் நிதியமைச்சர் ஒதுக்கியுள்ளார்.
கொவிட் 19 நிதியத்தினுடைய எந்தவொரு நிதியோ அல்லது வேறு எந்த நிதியோ கொவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தவிர உடல்வலு நிலையங்கள் அமைப்பதற்கென பயன்படுத்தப்படமாட்டாது.
பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியே இத்திட்டத்திற்கென பயன்படுத்தப்படும். எப்படியாயினும் நாங்கள் இப்பொழுது கொள்முதல் செயன்முறையையே செய்துகொண்டிருக்கின்றோம். அந்த நிதி தற்சமயம் பயன்படுத்தப்பட மாட்டாது என்றார்.
நாடு தழுவிய ரீதியில் உடல்வலு நிலையங்கள் அமைப்பதற்கென அமைச்சரவையினால் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 600மில்லியன் தொகையினை கொவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகளுக்காகப் பாவிக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் பேசியதற்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.