நிலைமை கைமீறிச் செல்வதாக தோன்றுகிறது! பத்ம குணரத்ன கவலை…

நாட்டில் கொவிட் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பொறிமுறை கைமீறி சென்றுகொண்டிருப்பது போல தோன்றுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் பத்ம குணரத்ன கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாட்டில் கொவிட் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பொறிமுறை கைமீறி சென்றுகொண்டிருப்பது போல தோன்றுகிறது. இப்பிரச்சினையை ஆரம்பத்திலேயே இல்லாதொழிக்க வேண்டுமாயின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித தாமதமும் இன்றி இது தொடர்பாக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் கட்டில் வசதிகளும் குறைந்தவண்ணமே உள்ளன.

தினமும் 1800க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் ஏற்கனவே நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் இருப்பு வசதிகளுக்கும் அதிகமாகிச்சென்று விட்டன. இன்னும் சில நோயாளிகளை வைத்தியசாலைகளில் போதிய இடவசதியின்மையாலும் காலதாமதத்தினாலும் தத்தமது வீடுகளிலேயே தங்கவைக்கப்பட்டுள்ள நிலமையும் காணப்படுகின்றது.

ஆகவே மக்கள் தங்களைத் தாங்களே சுயதனிமைப்படுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல்களை குறித்த அதிகாரிகள் மக்களுக்கு வழங்க வேண்டுமென அவர் மேலும் கேட்டுக் கொண்டார். ஏனென்றால் இது முன்பு பரவியதை விடவும் மிக வேகமாக தொற்றுக்குள்ளாக்கக்கூடியளவு வீரியமிக்கதாயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு நோயாளிகளுடைய எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதனால் நாட்டில் பயணக்கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.