வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் நடிகர் சாந்தனு…

கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர்களது மகனும், நடிகருமான சாந்தனு தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.


இது தொடர்பாக நடிகர் சாந்தனு டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனது பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து எங்கள் வீட்டில் உள்ள பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது பெற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்.” இவ்வாறு சாந்தனு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.