யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொரோனா-அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால் பொதுமக்கள் அவதானாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்று அதிகரித்த நிலை காணப்படுகின்றது. நேற்றைய தினம் 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் 1688 நபர்கள் யாழ் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். 21 மரணங்கள் யாழ் குடாநாட்டில் பதிவாகியுள்ளன.

இதனை விட தற்போது இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் யாழில் 1475 குடும்பங்களைச் சேர்ந்த 2261 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்படுகின்றன. அதேவேளையில் யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்திய அளவிலும் சில விடயங்களிற்கு தடை விதித்தும் இருக்கின்றோம்.

அரசினுடைய , சுகாதார அமைச்சினுடைய அறிவுறுத்தல்கள் சுகாதார வழி காட்டல்கள் தடைகளுக்கு இணங்க செயற்படுத்தியுள்ளோம். தற்போது பொலிஸார் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இந்த நடவடிக்கைகள் ஊடாக மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால் இந்த அபாயகரமான காலகட்டம் நாடு முழுவதும் காணப்படுகின்றது. எனவே மக்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் நாளாந்த நடவடிக்கைகளிற்கு பாரிய அளவில் அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் கண்டிப்பாக சுகாதார வழிகாட்டலைப் பின்பற்றி தமது செயல்களை செயற்படுத்த வேண்டும். அந்த வகையில் பொதுமக்கள் இந்த விடயங்களுக்கு ஒத்துழைத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சில முன்னேற்ற நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதாவது ஏற்கனவே கோப்பாய் மற்றும் கிளிநொச்சியில் இருந்த இரண்டு சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் சில சிகிச்சை நிலையங்களைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் கிளிநொச்சியிலும் 230 கட்டில்களுடன் ஒரு சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்துள்ளோம்.

அத்தோடு மருத்துவமனைகளையும் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் அவசர சிகிச்சைக்குரிய கட்டில்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளன. எனவே அதனையும் அதிகரிப்பதற்குரிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் எடுத்துள்ளார்கள்.

எனவே மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதன் காரணமாக பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே புதிய வீரியமிக்க வைரஸ் பரவல் இருக்கின்றமையினால் சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் இறுக்கமாக பின்பற்றி செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.