ஸ்ட்ரோக் அல்லது பக்க வாதம் ஒரு குடும்பத்தையே வேதனைக்குள்ளாக்கும் ஒரு கொடிய நோய். இருதய நோய்களுக்கு அடுத்ததாக இரண்டாவது முக்கியமான உயிர்க்கொல்லி நோயாகவும் இது இருக்கின்றது.
மூளையில் உள்ள ஒரு இரத்தக்குழாய் அடைபடும் போது ஸ்ட்ரோக் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் போது நிமிடத்திற்கு 19 லட்சம் நியூரான்கள் (நரம்பு செல்கள்) இறந்து போகின்றன. இதனாலேயே ஸ்ட்ரோக் வந்தவுடன் அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஸ்ட்ரோக்கில் பொன்னான நேரம்:
ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் தெரிந்த உடன் முதல் 3 முதல் 4.5 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் பூரண குணம் அடைய முடியும். நினைவிருக்கட்டும் 3 முதல் 4.5 மணி நேரத்திற்குள் சிகிச்சையை தொடங்க வேண்டும். ஸ்ட்ரோக் ஏற்பட்ட பின் இந்த காலத்தை நாம் பொன்னான நேரம் என கூறுகிறோம்.
பொன்னான நேரத்தில் செய்யக்கூடிய சிகிச்சைகள்
த்ரோம்போலிசிஸ் (Thrombolysis): த்ரோம் போலிசிஸ் என்பது மருந்துகள் மூலம் மூளையில் உள்ள அடைப்பை நீக்கும் ஒரு சிகிச்சையாகும். இதில் அல்டிபிலேஸ் (Alteplase) அல்லது டெனெக்டடி பிலேஸ் (Tenectelase) போன்ற மருந்துகள் கொண்டு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
த்ரோம்பேக்டமி (Throm bactomy): த்ரோம்பேக்டமி என்னும் சிகிச்சை ஆன்ஜி யோக்ராம் மூலம் மூளையில் உள்ள இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஒரு சிகிச்சையாகும். இது ஸ்ட்ரோக் வந்து 6 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டிய சிகிச்சை ஆகும்.
ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள்: 1. ஒரு கை அல்லது காலில் பலக்குறைவு / செயலிழப்பு. 2. வாய் கோணி போகுதல், 3. தலைச்சுற்று மற்றும் நடையில் தடுமாற்றம், 4. பேச்சு குளறுதல், 5. கண் பார்வை மங்குதல் / இரண்டு இரண்டாக தெரிதல் ஆகியவை ஆகும். இவற்றுள் ஏதேனும் ஒன்று திடீரென வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும்.